கரோனா வைரஸை விட மிக கொடூரமான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வைரஸ் ஆந்திராவை தொற்றியுள்ளது என ஜெகன்மோகன் அரசை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சீனாவை பயமுறுத்தி வரும் கரோனா வைரஸை விட, ஆந்திராவை கடந்த 8 மாதங்களாக தொற்றியுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வைரஸ் மிக கொடூரமானது.
இந்த வைரஸால் 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆந்திர பிரதேசம் என்றாலே தொழில் நிறுவனங்கள் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடும் நிலை இங்கு ஏற்பட்டுள்ளது. கியா மோட்டாஸ் கார் உற்பத்தி நிறுவனம், சிங்கப்பூர் நிறுவனங்கள், ஃபிராங்க்ளின் டெம்புள்டன், ஆசியா பேப்பர் அண்டு பல்ப்ஸ், ரிலையன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வரிசை கட்டி நிற்கின்றன.
இவையெல்லாம் கடந்த 8 மாதங்களிலேயே நடந்து விட்டது. இது மட்டுமின்றி, அமராவதியில் தலைமைச்செயலகம் இருக்கும்போது, விசாகப்பட்டினத்தில் மில்லினியம் டவரில் உள்ள நிறுவனங்களை துரத்திவிட்டு அங்கு தலைமைச் செயலகத்தை அமைக்க உள்ளார்களாம்.
ஒரு தொழிற்சாலையை ஆந்திராவுக்கு கொண்டு வரும் சாமர்த்தியம் இந்த அரசுக்கு இல்லை. ஆனால், மில்லினியம் டவர்ஸில் பணியாற்றி வரும் 18 ஆயிரம் ஊழியர்களுக்கு எதிரான திட்டத்தை மட்டும் நிறைவேற்ற தயாராகி விட்டனர். சொந்தமாக ஒரு கட்டிடத்தை கூட கட்ட முடியாத இந்த அரசா, கடலோர ஆந்திராவில் உள்ள மாவட்டங்களை காப்பாற்ற போகிறார்கள் ?
இவ்வாறு அவர் விமர்சித் துள்ளார்