ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களில் 125 பதுங்கு குழிகள் கட்ட அம்மாநில அரசு நிர்வாகம் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது.
எல்லையில் சண்டை நிறுத்தம் மேற்கொள்வது என இரு நாடுகள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் இந்த தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனால் எல்லைப் பகுதிமக்கள் பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் குடும்ப பதுங்கு குழிகள் மற்றும் சமுதாய பதுங்கு குழிகளை காஷ்மீர் அரசு அமைத்து வருகிறது.
இந்நிலையில் காஷ்மீர் மண்டல ஆணையர் பசீர் கான் நேற்று கூறும்போது, “குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு வாய்ப்புள்ள கிராமங்களில் மக்களை பாதுகாக்க 125 சமுதாய பதுங்கு குழிகள் கட்ட அரசு அரசு 25 கோடி ஒதுக்கியுள்ளது. பண்டிப்போரா மாவட்டத்திலும் 125 சமுதாய பதுங்கு குழிகள் கட்டப்பட்டுகின்றன. இதற்காக ரூ.25 கோடி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுவிட்டது” என்றார்.