டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி மற்றும் வத்ரா தம்பதியின் மகன் ரோஹன் முதன்முறையாக வாக்களித்தார்.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை தெரிவிக்கிறது.
அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப்பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் தவிக்கும் பாஜகவும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகக் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்துள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் பல்வேறு பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் தங்கள் பகுதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது மகளுடன் சென்று வாக்களித்தார். பிரியங்கா காந்தி மற்றும் வத்ரா தம்பதியின் மகன் ரோஹன் ராஜீவ் வத்ரா முதன்முறையாக வாக்களித்தார்.
அவருக்கு 18 வயது பூர்த்தியானதை தொடர்ந்து முதன்முறை வாக்காளராக தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் பிரியங்கா மற்றும் ராபர்ட் வத்ராவும் உடன் சென்றனர்.