ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால், ஜெகன் சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகவில்லை.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதில் சிபிஐ பதிவு செய்த 11 வழக்குகளும், அமலாக்கப்பிரிவினர் பதிவு செய்துள்ள 5 வழக்குகளும் தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் முதல் குற்றவாளியாவார். இவர் முதல்வரானதும், தனக்கு பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை காரணமாக ஒவ்வொரு முறையும் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை சிபிஐ, அமலாக்கப்பரிவு நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து விட்டன. இதனால், இவர் ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதுவரை ஜெகன் நேரில் ஆஜராக வேண்டியுள்ளது. ஆனால், நேற்று சிபிஐ, அமலாப்பிரிவு நீதிமன்ற நீதிபதிகள் விடுப்பு எடுத்த காரணத்தினால், இவ்வழக்கு வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால், முதல்வர் ஜெகனின் ஹைதராபாத் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.