இந்தியா

இந்திய விஞ்ஞானிக்கு சன்ஹாக் அமைதிப் பரிசு

பிடிஐ

இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீன்வளர்ப்புப் பணியில் முன்னோடியாக விளங்கிய இந்திய வேளாண் விஞ்ஞானி டாக்டர் விஜய் குப்தாவுக்கு சன்ஹாக் அமைதிப் பரிசு நேற்று வழங்கப்பட்டது. விருதை அவர் கிரிபதி தீவின் அதிபருடன் பகிர்ந்துகொண்டார்.

உலகம் முழுவதிலுமிருந்து வந்த பார்வையாளர்கள் மத்தியில் சியோல் நகரில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில் 10 லட்சம் டாலர் பரிசுத் தொகை டாக்டர் குப்தா (76), கிரிபாதி தீவின் அதிபரான தாங் (63) ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர்.

மக்களின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் இவ்விருது நோபல் அமைதிப் பரிசுக்கு நிகராகக் கருதப்படுகிறது.

வாழ்வில் மாற்றம்

விருதை பெற்றுக்கொண்ட பின் குப்தா கூறும்போது, “ஒரு விஞ்ஞானியாக என் வாழ்நாள் முழுவதும் சோதனைக்கூடங்களில் உருவாக்கும் அனைத்து உயர்தர மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

குப்தா, ஆந்திர மாநிலம் பாபட்லா பகுதியைச் சேர்ந்தவர். நன்னீர் மீன் வளர்ப்பைக் குறைந்த செலவில் சிறப்பாகச் செய்தமைக்காக 2005-ல் உலக உணவு விருது இவருக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT