இந்தியா

‘‘நல்ல பணிகளை செய்துள்ளாய்’’ - டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்; ஹனுமன் கோயிலில் கேஜ்ரிவால் வழிபாடு

செய்திப்பிரிவு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஹனுமன் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப்பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி பிரச்சாரம் செய்தார்.

அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளாகப் பிறகு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.

இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்து வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முந்தைய பல கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், பெரும்பாலானவை மீண்டும் ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் டெல்லி கனாட்பிளேசில் உள்ள அனுமன் கோயிலில் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் தனது

ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாட்டின் வளர்ச்சி மற்றும் டெல்லியின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன். ‘நீ நல்ல பணிகளை செய்துள்ளாய். இதேபோன்று தொடர்ந்து மக்களுக்கு பணியாற்று. எனக்கு பழத்தை வைத்துச் செல். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என கடவுள் என்னிடம் கூறினார்.

தான் ஒரு அனுமன் பக்தன் எனவும், தினந்தோறும் அனுமன் சாலிசா பாடி பிரார்த்தனை செய்வதாகவும் கேஜ்ரிவால் அண்மையில் கூறியிருந்தார். தேர்தலுக்காக அவர் அனுமன் பக்தர்போல் நடிப்பதாக பாஜக மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT