மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தாக்க முற்பட்டது கண்டிக்கத்தக்கது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்தார்
மக்களவை இன்று காலை தொடங்கியதும், கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி எழுந்து, " நாட்டில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ள விவரம்" குறித்துக் கேட்டார்.
இதற்கு மத்திய சுதாகாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளிக்க எழுந்தார். இந்த கேள்விக்குப் பதில் அளிக்கும் முன், பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி இயல்புக்கு மாறாக விமர்சனம் செய்தமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
அதன்பின் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடர்ந்து பதில் அளிக்க முயன்றார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தமிழக எம்.பி. மாணிக் தாக்கூர், தனது இருக்கையில் இருந்து எழுந்து நடந்து ஆவேசமாக ஹர்ஷவர்தன் இருக்கை அருகே நடந்து வந்தார். அப்போது அங்கிருந்த உ.பி. பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது கைகளால் மத்திய அமைச்சரை மறித்துக் கொண்டு மாணிக் தாக்கூர், அமைச்சரை நெருங்குவதைத் தடுத்தார்.
அவையில் பெரும் குழப்பமும், கூச்சலும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவையை நண்பகல் 1 மணிவரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் கூடியபோது காங்கிரஸ், பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடவே அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவையை நடத்திய ஏ.ராஜா அறிவித்தார்.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், " மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனை தாக்க காங்கிரஸ் எம்.பி. முயன்றது கண்டிக்கத்தக்கது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அமைச்சர் ஏதாவது தவறாகப் பேசி இருந்தால், அதை சபாநாயகர் பார்த்து நடவடிக்கை எடுப்பார், ஆனால், அமைச்சரைத் தாக்க முற்படுவது கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்தார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவைக்கு வெளியே அளித்த பேட்டியில் கூறுகையில், " வயநாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லை என்பதால் அது குறித்துப் பேச எழுந்தேன். ஆனால் மக்களவையில் நான் பேசுவதை பாஜகவினர் விரும்புவதில்லை. காங்கிரஸ் கட்சியினரைப் பேசவும் அனுமதிப்பது இல்லை.
நாடாளுமன்றத்தில் உள்ள வீடியோ காட்சியில் பாருங்கள் மாணிக்கம் தாக்கூர் யாரையும் தாக்கும் விதத்தில் செல்லவில்லை, யாரையும் தாக்கவும் இல்லை" எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மக்களவைக்கு வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் " பிரதமர் மோடியை அவமரியாதையாக ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனால், மக்களவையில் நான் ராகுல் காந்தியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது காங்கிரஸ் எம்.பி. என்னை இருக்கை நோக்கி வந்து என்னைத் தாக்க முயன்றார், என் கைகளில் இருந்த காகிதங்களைப் பறித்தார்.
பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வார்த்தைகள் முன்னாள் பிரதமர் மகனின் வாயிலிருந்து வரக்கூடாது. ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தவறவிடாதீர்..