காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

'பிரதமர் போல் மோடி நடந்து கொள்ளவில்லை': ராகுல் காந்தி சாடல்

பிடிஐ

நாட்டின் பிரதமர் போல் மோடி நடந்துகொள்ளவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி மக்களவையில் நேற்று பேசுகையில் ராகுல்காந்தியை ட்யூப்லைட் என்று விமர்சித்தார். அதற்குப் பதிலடியாகவே ராகுல் காந்தி இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். அப்போது, அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் அடுத்த 6 மாதங்களுக்குள் பிரதமர் மோடியை மக்கள் பிரம்பால் தாக்குவார்கள் என்றார். முன்கூட்டியே கூறியதற்கு நன்றி. நான் நன்கு உடற்பயிற்சி செய்து தயாராகிவிடுவேன்" எனத் தெரிவித்தார்.

அப்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுந்து பேச முற்பட்டபோது பாஜக எம்பி.க்கள் குரல் கொடுத்ததால் அவர் அமர்ந்துவிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "நான் கடந்த 30 நிமிடங்களாகப் பேசுகிறேன். இப்போதுதான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. என்ன செய்வது சில டியூப்லைட் இப்படித்தான் வேலை பார்க்கும்" எனக் கிண்டல் செய்தார்.

பிரதமர் மோடி டியூப்லைட் என்று விமர்சித்தது குறித்து ராகுல் காந்தியிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், " பிரதமர் போல் மோடி நடந்து கொள்ளவில்லை. பொதுவாகப் பிரமதருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருக்கும். பிரதமர் என்பவருக்குத் தனிப்பட்ட வகையில் நடத்தை இருக்கும், ஆனால், நம்முடைய பிரதமருக்கு இவை இல்லை.

பிரதமர் போல மோடி நடக்கவில்லை. மக்களவையில் நேற்று நாங்கள் பிரதமர் மோடியின் பேச்சுக்குப் பதில் அளிக்க முற்பட்டபோது எங்களைப் பேசக்கூட அனுமதிக்கவில்லை. எங்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன" எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT