ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் யார் என்ற கேள்விக்கு கிராமப் பள்ளி மாணவன் ஒருவன், ஹேமந்த் சோரன் என்று கூறியதைக் கேட்டு மாநிலத்தின் கல்வி அமைச்சர் அதிர்ச்சியடைந்தார். மேலும் அடுத்தடுத்த கேள்விகளுக்கு நிறைய அதிர்ச்சிகள் அவருக்கு காத்திருத்தன.
ஜார்க்கண்ட்டில், கடந்த ஜனவரி 28 ம் தேதி அமைச்சராக பதவி ஏற்று, மறுநாள் இலாகாவைப் பெற்ற கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாத்தோ, தொடர்ந்து பள்ளிகளுக்கு திடீர் ஆய்வுகளை மேற்கொள்வேன் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து ராம்கர் மாவட்டத்தின் கோலா தொகுதியில் உள்ள கோயா கிராமத்தில் உள்ள பள்ளியை மாத்தோ புதன்கிழமை பார்வையிட்டார், அப்போது 7ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த அமைச்சர் மாணவர்களிடம் உரையாடினார்.
அப்போது ஒரு மாணவனிடம், நமது மாநிலத்தில் கல்வி அமைச்சர் யார் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மாணவர், ''ஹேமந்த் சோரன்'' என்று கூறியதைக் கேட்டு அமைச்சர் அதிர்ச்சியடைந்தார்.
மீண்டும் இன்னொரு கேள்வியை வேறொரு மாணவனிடம் கேட்டார். ''சரி நமது மாநிலத்தின் முதல்வர் யார்'' என்று அவரது கேள்விக்கு பதிலாக அமித்ஷா என்று அம்மாணவன் எழுந்து பதில் கூறினார்.
மாணவர்களிடம் தொடர்ந்து வேறு சில கேள்விகளைக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்களால் அமைச்சர் திக்குமுக்காடிப்போனார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இச்சம்பவம் குறித்து குறிப்பிட்ட கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலாவதி சோனியிடம் பேசியபோது, அமைச்சர் 10 நாட்களுக்கு முன்புதான் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அது மாணவனுக்குத் தெரியவில்லை. மேலும் அமைச்சர் பள்ளியை பார்வையிட்டபோது நான் விடுப்பில் இருந்தேன். ஏனோ மாணவர்கள் சரியான பதில்களை வழங்கத் தவறிவிட்டனர், எங்கள் பள்ளியில் மொத்தம் 90 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் உள்ளனர்.'' என்றார்.
கல்வித் துறையின் உயரதிகாரி ராம்கர் மாவட்டத்தின் துணை ஆணையர் சந்தீப் சிங் பிடிஐ தொடர்புகொண்டது. அப்போது அவர் கூறுகையில்,
''அரசு பள்ளியின் மோசமான கல்வித் திறன் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் சுஷில் குமார் விசாரித்து நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிப்பார்'' எனவும் தெரிவித்தார்.