ஷீனா போரா கொலை வழக்கில் முன்னாள் ஊடக நிர்வாகி பீட்டர் முகர்ஜிக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ல் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீட்டர் முகர்ஜிக்கு, அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா முறைதவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷ்யாம்வர் ராய் ஆகியோரும் பிறகு பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டனர். நால்வரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் ஜாமீன் கோரி பீட்டர் முகர்ஜி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீட்டர் முகர்ஜிக்கு எதிராக ஷ்யாம்வர் ராய் அளித்த வாக்குமூலம் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
பீட்டர் தனது குழந்தைகள் ராகுல், விதி மற்றும் பிற சாட்சிகளை சந்திக்க கூடாது, பாஸ்போர்ட்டை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதி விதித்தார்.
என்றாலும், ஜாமீனுக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக நீதிபதி தனது உத்தரவை 6 வாரங்களுக்கு நிறுத்தி வைத்தார்.