உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம், பிஸ்வான் அருகே ஜலால்பூர் என்ற கிராமத்தில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு குழாயில் இருந்து நேற்று அதிகாலையில் வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில் ரசாயன ஆலையை அடுத்துள்ள கம்பள தொழிற்சாலையில் உறங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஆர்.குமார் கூறும்போது, “வாயுக்கசிவு குறித்து உள்ளூர் மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். துர்நாற்றம் காரணமாக தொடக்கத்தில் அப்பகுதிக்குள் செல்ல முடியவில்லை. பிறகு நடந்த மீட்புப் பணியில் அருகில் உள்ள கம்பள தொழிற்சாலையில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அப்பகுதியில் சில நாய்களும் இறந்து கிடந்தன. சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றியுள்ளோம். தலைமறைவான தொழிற்சாலை உரிமையாளரை தேடி வருகிறோம்” என்றார்.இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கவும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.