பியூஷ் கோயல் 
இந்தியா

ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது: தயாநிதி மாறன் கேள்விக்கு அமைச்சர் பியூஷ் கோயல் பதில்

செய்திப்பிரிவு

ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மத்திய வணிக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக எம்.பி. தயாநிதி மாறன், "அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன. இதனால் இந்திய வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனை நிறுவனங்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அந்த நிறுவனங்களின் விதிமீறல்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறதா? என மத்திய வணிக, தொழில் துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று முன்தினம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

சில ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள், பொருட்கள் விற்பனையைில் தொழில் நெறிகளை மீறி அதிக தள்ளுபடிகளை வழங்குவதாக தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வணிக அமைப்பிடம் (டிபிஐஐடி) புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டு நிதியுதவியுடன் செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக பொருட்களை விற்பனை செய்ய முடியாது. விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே இணைப்பு தளமாக மட்டுமே செயல்பட முடியும். பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம், ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு கிடையாது என்றார்.

சென்னை தொழில் வழித்தடம்

தொழில் வழித்தடம் குறித்த மற்றொரு கேள்விக்கு அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலில், “விசாகப்பட்டினம் - சென்னை தொழில் வழித்தடத்துக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி ரூ.4,486 கோடி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT