கரோனா வைரைஸ் பாதிப்புக்கான அறிகுறி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 10 பேர் செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவி வரும் கரோனா வைரஸ் எனும் கொடிய நோய்க்கிருமி, தற்போது நம் நாட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளது. கேரள மாநிலத்தில் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து, பணி நிமித்தமாக சீனா சென்று, தாயகம் திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்டோர் இரு மாநிலங்களிலும் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.
ஆந்திராவில் 9 பேருக்கும், தெலங்கானாவில் 19 பேருக்கும் கரோனா வைரஸ் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று கேரளாவிலிருந்து வந்த ஒரு பெண் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார்.மேலும் சீனா சென்று வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் காந்தி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.நேற்று மட்டும் இம்மருத்துவமனையில் 10 பேர் கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.