மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசிய காட்சி : படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

குடியுரிமைத் திருத்தச் சட்டம்; எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்தி, பொய்யான தகவலைப் பரப்புகின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிடிஐ

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களைப் பரப்பி, மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி குற்றம் சாட்டிப் பேசினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் மக்கள் முதல் முறையாக வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஊழலுக்கு எதிரான அமைப்பு அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் எந்தவிதமான ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் வைக்கவில்லை. அவையை ஸ்தம்பிக்க வைக்கும் பணியில்தான் ஈடுபட்டன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை ஆலோசனையில்லாமல் எடுத்தோம் என ஒரு எம்.பி. குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டு தவறானது. ஒட்டுமொத்த தேசமும் இது குறித்து விவாதித்தது, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

மக்கள் எளிதாக இதை மறக்கமாட்டார்கள். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். தெலங்கானா மாநில உருவாக்கத்தில் என்ன மாதிரியான முறையைப் பின்பற்றினீர்கள்? அவை முடக்கப்பட்டது, தொலைக்காட்சியில் நேரலை கூட நிறுத்தப்பட்டது.

ராம் மனோகர் லோகியா, லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் பாகிஸ்தானில் மதரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மக்களை ஆதரித்தார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் இவ்வாறு தவறான தகவல்களைத் தேசத்துக்குக் கூறுவதும், மக்களைத் தவறாக வழிநடத்துவதும் சரியான ஒன்றா? குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் சேர்ந்திருப்பது வேதனைக்குரியது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளாவில் நடக்கும் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளார்கள் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்தார். ஆனால், அதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். சட்டத்துக்கு எதிராகப் போராடி ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன.

என்பிஆர் நடவடிக்கை என்பது எங்கள் அரசு மட்டும் எடுக்கவில்லை. இதற்கு முன் 2010, 2015-ம் ஆண்டிலும் எடுக்கப்பட்டுள்ளது. என்பிஆர் என்பது நிர்வாக ரீதியான உதவிகளுக்காக எடுக்கப்படும் முறையாகும். ஆதலால், மக்களைத் தவறாக எதிர்க்கட்சிகள் வழிநடத்த முயலாதீர்கள்.

என்பிஆர் நடவடிக்கையை குறுகிய அரசியல் கண்ணோட்டத்தோடு எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள். அவர்கள் செய்வது ஏழைகளுக்கு எதிரானது . என்பிஆரில் பதிவு செய்யப்படும் எந்த குடிமகனும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படமாட்டார்கள்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT