அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளருக்கு நீதி கேட்டுப் போராட்டம். 
இந்தியா

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் கவலைக்கிடம்; குற்றவாளியை ஒப்படைக்கக் கோரி மாணவிகள் போராட்டம்

பிடிஐ

மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட 25 வயதுப் பெண் விரிவுரையாளர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் இன்று தெரிவித்தனர்.

வார்தா மாவட்டத்தில் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார் ஹிங்காங்காட்டைச் சேர்ந்த அங்கிதா பிசுடே (25). இவர் கடந்த திங்கள் கிழமை அன்று கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் விகேஷ் நாக்ரலே (27) என்பவர் அங்கிதா மீது ஆசிட் வீசியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆசிட் வீசிய நபருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி வார்தாவில் உள்ள ஹிங்காங்கட் மற்றும் சமுத்திரபூரைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு துருபி ஜாதவ் தலைமையிலான சிறப்புக் குழு விசாரிக்கும் என்று வார்தா போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.

நாக்ரலே என்பவர் சில காலமாகவே அங்கிதாவைப் பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் என்று அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே நாக்ரலே கைது செய்யப்பட்டார். அவர் மீது 307 (கொலை முயற்சி) மற்றும் 326-ஏ (அமிலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடிய குற்றம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாக்ரேலும் பெண் விரிவுரையாளரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களாக இருந்தனர். நாக்ரலேவின் தவறான நடத்தை காரணமாக அங்கிதா அவருடனான நட்பை முறித்துக்கொண்டார் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கிதா 40 சதவீத தீக்காயங்களுக்கு ஆளான நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாக்பூரில் உள்ள ஆரஞ்சு சிட்டி மருத்துவமனையில் அங்கிதா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன் தினம் மாநில அரசு, பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட நவி மும்பையைச் சேர்ந்த நேஷ்னல் பர்ன்ஸ் சென்டர் இயக்குனர் சுனில் கெஸ்வானியை நாக்பூருக்கு விரைந்தனுப்பியது.

கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் மோசமான நிலையே தொடர்வதை அடுத்து வார்தா நகரத்தில் இன்று அங்கிதாவுக்கு நீதி கோரி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இதில் 3,500 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கடையடைப்புக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். பேரணியின்போது, ''குற்றவாளியை எங்களிடம் ஒப்படையுங்கள்'' என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இந்த அணிவகுப்பு சிவாஜி சவுக்கிலிருந்து தொடங்கி டாக்டர் அம்பேத்கர் சிலையில் நிறைவடைந்தது. அதன் பின்னர் கோரிக்கைகளின் குறிப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பந்த் அழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து நகரத்தில் கடைகள் மற்றும் அலுவலகங்கள் பிற்பகல் 3 மணி வரை மூடப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லூரி பெண் விரிவுரையாளர் அங்கிதா பிசுடேவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து நாக்பூர் ஆரஞ்சு சிட்டி மருத்துவமனை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிப்பதாவது:

''ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கல்லூரி விரிவுரையாளர் அங்கிதா பிசுடேவின் உடல்நிலையில் இதுவரை எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. அவரது உயிரணுக்கள் ஆக்சிஜன் சப்ளை மூலம் பராமரிக்கப்படுகின்றன. அவர் கட்டளைகளுக்குப் பதிலளிக்கிறார். அவரது நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது.

நோயாளிக்கு இரண்டு அமர்வுகளில் சிதைவு, ஒத்தடம் மற்றும் மேல் மூட்டுகளில் பல ஃபாசியோடோமி மேற்கொள்ளப்பட்டது.

சிதைவு என்பது இறந்த, சேதமடைந்த அல்லது பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றுவதற்கான ஒரு மருத்துவ முறையாகும். அதே நேரத்தில் ஃபாசியோடோமி என்பது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும்.

சிகிச்சையளித்து வரும் மருத்துவ வல்லுநர்கள் தொற்று மற்றும் சுவாசக் குறைவு போன்ற சிக்கல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்''.

இவ்வாறு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT