சன் குழுமம் தனது 33 சானல்களுக்கான பாதுகாப்பு ஒப்புதல் உரிமங்களைப் பெற்று விடும் என்று தெரிகிறது, காரணம், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அரசு இதற்கான அனுமதியை மறுக்கக் கூடாது என்று கோப்பு ஒன்றில் குறிப்பு எழுதியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு ஒப்புதல் உரிமம் வழங்காமல் இருப்பதற்கான போதிய அடிப்படைகள் இருப்பதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நம்பவில்லை என்று ஜேட்லி குறிப்பெழுதியுள்ளதாக அரசுத்தரப்பு முதன்மை அதிகார மட்ட செய்திகள் கூறுகின்றன.
ஆனாலும், உள்துறை விவகார அமைச்சகம், இன்னும் அந்தக் குறிப்பு குறித்து முடிவெடுக்கவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் சன் குழும சானல்களின் உரிமம் காலாவதியாகிவிட்ட நிலையில், ஜூன் மாதம் தேசப் பாதுகாப்பு கருதி சன் குழும சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதலை மத்திய உள்துறை விவகார அமைச்சகம் மறுத்தது.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால், குற்றவழக்கு நடவடிக்கை காரணமாக தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு ஒப்புதல் மறுக்கப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
ஆனாலும், டெல்லி மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் குழுமத்தை எப்.எம். ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கியது. 2002 முதல் பண்பலை வானொலிகளை நடத்தி வரும் சன் குழுமம் நீதிமன்றத்தை இது தொடர்பாக அணுகியுள்ளது.
அருண் ஜேட்லி பாதுகாப்பு ஒப்புதலுக்கு ஆதரவு தெரிவித்தாலும், உள்துறை விவகார அமைச்சகம் என்ன முடிவெடுக்கிறதோ அதனையும் ஏற்பார் என்றே நம்பப் படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சட்ட அமைச்சகம் மற்றும் அட்டார்னி ஜெனரல் அலுவலகத் தரப்பில், உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை காரணம் காட்டி பாதுகாப்பு ஒப்புதல்களை சேனல்களுக்கு மறுக்க முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தது.
மற்ற சேனல்கள் சிலவற்றின் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ள போது ஒரு குழுமத்துக்கு மட்டும் பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கருதுகிறது.