கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்த 320 அதிகாரிகள் தங்கள் பணிக்காலத்துக்கு முன்பாகவே ஓய்வு அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அதில், ''2014 ஜூலை முதல் 2019 டிசம்பர் வரை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 320 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களின் பணிக்காலத்துக்கு முன்பாகவே தங்கள் பணியில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்கள். இதில் குரூப் ஏ பிரிவில் 163 அதிகாரிகள், குரூப் பி பிரிவில் 157 அதிகாரிகள் அடங்குவர். இதில் ஐஏஎஎஸ், ஐபிஎஸ், இந்திய வனத்துறை ஆகிய அதிகாரிகளும் அடங்குவர்" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசில் எத்தனை பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்ற கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங், பதில் அளித்துப் பேசுகையில், "மத்திய அரசில் 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 பணியிடங்களில் 2018, மார்ச் மாதம் நிலவரப்படி தற்போது 31 லட்சத்து 18 ஆயிரத்து 956 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
2018, மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி 6 லட்சத்து 18 ஆயிரத்து 956 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. அதிகாரிகள் ஓய்வு பெறுதல், ராஜினாமா செய்தல், பணியிலிருக்கும் போதே இறத்தல், பதவி உயர்வு காரணமாக காலியிடங்கள் உருவாகின்றன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து அமைச்சகங்களிலும் நிரப்பப்பட்டு வருகின்றன.
2019-20 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி ஆகிய மூன்று பணியாளர் தேர்வாணையங்கள் மூலம் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதிகபட்சமாக ஆர்ஆர்பி மூலம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 391 பேரும், எஸ்எஸ்சி மூலம் 13 ஆயிரத்து 995 பேரும், யுபிஎஸ்சி மூலம் 4,399 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்புத் துறை சார்பிலும் 3 லட்சத்து 10 ஆயிரத்து 832 காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது''.
இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.