காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா? இல்லையா? காஷ்மீர் முன்னாள் முதல்வர் தடுப்புக் காவல் குறித்து பிரியங்கா காந்தி கண்டனம்

ஐஏஎன்எஸ்

ஜம்மு காஷ்மீரின் இரு முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்களே? நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு செய்தது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரை மாநில அரசு வீட்டுக் காவலில் வைத்தது.

இவர்கள் மூன்று பேரின் மீதும் காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காஷ்மீர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வீட்டுக் காவலில் கடந்த 6 மாதங்களாக வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தோடு பரூக் அப்துல்லாவுக்கு முதல் 3 மாதக் காவல் முடிந்த நிலையில், அடுத்த 3 மாதங்களுக்குக் காவலை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டது.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி(இடமிருந்து வலம்)

காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால் விசாரணையின்றி ஓராண்டு வரை அவரை வீட்டுக் காவலில் வைக்க முடியும்.

முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி பொதுப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 107-ன் கீழும், உமர் அப்துல்லா பிரிவு 151-ன் கீழும் தனித்தனியாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் காவலில் வைக்கப்பட்டு இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், " ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி கடந்த 6 மாதங்களாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். லட்சக்கணக்கான மக்கள் எந்தவிதமான குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன் எத்தனை நாட்கள் இவர்களை அடைத்து வைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். இப்போது, கேட்கிறோம், நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா அல்லது இல்லையா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT