இந்தியா

ஷீனா போரா கொலை வழக்கில் சகோதரர் மிகைல், ராகுல் முகர்ஜியிடம் மும்பை போலீஸார் விசாரணை

பிடிஐ

ஷீனா போரா கொலை வழக்கில் தனியார் டிவி முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலிடம் மும்பை போலீஸார் 2-வது முறையாக நேற்று விசாரணை நடத்தினர். மேலும் ஷீனாவின் சகோதரர் மிகைல் போராவிடமும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ஷீனாவுடனான உறவு குறித்தும், அவர் காணாமல் போனது குறித்து புகார் செய்யாதது ஏன் என்றும் ராகுலிடம் விசாரணை நடத்தப்பட்டது. எனினும் ஷீனா கொலைக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. கவுரக் கொலையாக இருக்குமா என்பது உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

இந்நிலையில், அசாம் மாநிலம் குவாஹாட்டி சென்றுள்ள மும்பை போலீஸார், ஷீனா போராவின் சகோதரர் மிகைலிடமும் விசாரணை நடத்தினர். எனினும் போலீஸார் இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை.

உயிருக்கு ஆபத்து

குவாஹாட்டியில் மிகைல் போரா நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “ஷீனா கொலை செய்யப் பட்டதற்கான காரணம் எனக்குத் தெரியும். இதனால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது” என்றார்.

ஸ்டார் இந்தியா நெட்வொர்க் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய பீட்டர் முகர்ஜியும் இந்திராணியும் கடந்த 2002-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருமே ஏற்கெனவே திருமணமான வர்கள். இந்திராணிக்கு ஏற்கெனவே ஷீனா போரா என்ற மகளும் மிகைல் போரா என்ற மகனும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2012-ம் தேதி ஷீனாவின் சடலம் வனப்பகுதியிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் இந்திராணியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஷீனா தனது மகள்தான் என்று இந்திராணி ஒப்புக்கொண்டார்.

இதுபோல், இந்திராணியின் முதல் கணவர் சஞ்சீவ் கண்ணா கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT