இந்தியா

காந்தியை அவமதிக்கவில்லை: பாஜக எம்.பி. அனந்த்குமார் விளக்கம்

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியை அவமதித்ததாக தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என பாஜக தலைமைக்கு அக்கட்சி எம்.பி. அனந்த்குமார் ஹேக்டே கடிதம் எழுதி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். பெங்களூருவில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற சுதந்திர போராட்டம் ஒரு நாடகம்” என பேசியதாக தகவல் வெளியானது. காந்தியை அவமதித்துவிட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அனந்த் குமார் ஹெக்டேவுக்கு பாஜக மேலிடம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஹெக்டே எழுதி உள்ள கடிதத்தில், “பெங்களூரு நிகழ்ச்சியில் பேசும்போது மகாத்மா காந்தியின் பெயரை நான் குறிப்பிடவும் இல்லை, அவரை அவமதிக்கவும் இல்லை. இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று காலை யில் மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.- பிடிஐ

SCROLL FOR NEXT