இந்தியா

ஷாஹின்பாக் போராட்டத்தை வைத்து தேர்தலைச் சந்திக்க அமித் ஷா முடிவு கட்டிவிட்டார்: கேஜ்ரிவால் கடும் விமர்சனம்

செய்திப்பிரிவு

சிஏஏவுக்கு எதிரான டெல்லி, ஷாஹின்பாக் போராட்டத்தை வைத்தே டெல்லி சட்டசபைத் தேர்தலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கத் திட்டமிட்டுள்ளார், ஏனெனில் அவருக்கு பேச வேறு எதுவும் இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, வாக்கு எண்ணிக்கை 11ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிப் பேட்டியில் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

ஷாஹின்பாக் போராட்டங்களினால் சாலைப் போக்குவரத்து பாதிக்கிறது என்கின்றனர், சரி, அமித் ஷாதானே உள்துறை அமைச்சர், அவர் எவ்வளவு அதிகாரம் படைத்தவர் அவர் நினைத்தால் சாலையை கிளியர் செய்ய முடியாதா என்ன? அவர் செய்ய மாட்டார், காரணம் அவர் டெல்லி தேர்தலை ஷாஹின்பாக்கை வைத்தே சந்திக்க திட்டமிட்டுள்ளார். பாஜகவுக்கு பேச வேறு பிரச்சினைகள் இல்லை.

பாஜக வேறு எதையும் பேச மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்குப் பேச எதுவும் இல்லை. ஷாஹின்பாக்.. ஷாஹின்பாக்.. ஷாஹின்பாக் என்பார்கள், இந்து-முஸ்லிம்.. இந்து முஸ்லிம்... இந்து முஸ்லிம்.. இல்லையேல் பாகிஸ்தான்.. பாகிஸ்தான்.. பாகிஸ்தான்... என்று கூச்சலிடுவார்கள், இதைத்தான் அவர்கள் செய்ய முடியும்.

‘என்னைப் பார்க்க எந்தக் கோணத்திலாவது பயங்கரவாதி போலவா தெரிகிறது’

அரவிந்த் கேஜ்ரிவாலை மத்திய அமைச்சர் ஒருவர் உட்பட பாஜகவினர் பயங்கரவாதி என்று பேசி வருவது குறித்து கேஜ்ரிவால் கூறும்போது, “என்னைப் பார்த்தால் எந்தக் கோணத்திலாவது பயங்கரவாதி போலவா இருக்கிறது?

எந்த விதத்தில் நான் பயங்கரவாதி, அவர்கள் எப்படி என்னை பயங்கரவாதி என்று முத்திரைக் குத்த முடியும்? டெல்லி மக்களின் வாழ்வுக்காக நான் அர்ப்பணித்துள்ளேன். இலவச மின்சாரம், இலவசக் குடிநீர், பள்ளிகள், மருத்துவமனைகள் என்று நல்ல வசதிகளை நான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். நான் யார் என்பதை டெல்லி மக்கள் முடிவு செய்வார்கள்” என்றார்.

பள்ளிகள், மருத்துவமனைகள் குறித்து பாஜக ‘விசாரணை’ செய்கிறதாமே என்ற கேள்விக்குப் பதில் அளித்த கேஜ்ரிவால், “மூடப்பட்டு குழந்தைகள் வேறு புதிய கட்டிடங்களுக்குச் சென்று விட்டனர், ஆனால் இவர்கள் பழைய கட்டிடங்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றனர். எவ்வளவு பெரிய பொய், ஏன் உங்கள் சேனலே கூட இதனை விசாரித்து பாஜக பொய் கூறுகிறது என்று கூறவில்லையா?

அதே போல் பிரதமர் மோடி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாங்கள் ஸ்வீகரிக்கவில்லை என்று விமர்சித்தார், ஆனால் டெல்லியில் அந்தத் திட்டத்தினால் ஒருலட்சத்துக்கும் குறைவானவர்களே பயன்பெறுவார்கள். மாறாக எங்கள் அரசின் மருத்துவத் திட்டத்தில் ஏழை, பணக்காரர் யாராக இருந்தாலும் 2 கோடி பேர் பயனடைகின்றனர்.

நான் இரண்டு திட்டங்களையுமே அமல் செய்கிறேன் என்றுதான் கூறினேன் ஆனால் அவர்கள் மொத்தமாக மறுத்துவிட்டனர். ஒன்று எங்கள் திட்டம் அல்லது அவர்கள் திட்டம் ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும் என்றனர். இன்னமும் கூட இரண்டையுமே அமல் செய்யவே நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் கேஜ்ரிவால்.

SCROLL FOR NEXT