திப்ருகர்: அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டம் நஹார்கட்டியா நகர் அருகே புர்ஹி திஹிங் என்ற சிறிய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. தலைநகர் குவாஹாட்டியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆறு அமைந்துள்ளது.
இதனையொட்டி ஆயில் இந்தியா நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் எண்ணெய் குழாயில் வெடிப்பு உண்டாகி அதில் தீப்பற்றியது. இந்த தீ ஆற்றைச் சுற்றிலும் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் அடர்ந்த கரும்புகை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பொதுமக்கள் யாரேனும் சிலர் குழாயை உடைத்து, அதனால் எண்ணெய் ஆற்றுக்குள் பரவியிருக்க கூடும் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக ஆயில் இந்தியா நிறுவனத்தின் மூத்த மேலாளர் திரிதிவ் ஹசாரிகா கூறும்போது, “கடந்த ஜனவரி 31-ம்தேதி இரவு விபத்து ஏற்பட்டது. பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் ஆற்றில் தீப்பற்றி எரிந்து வருகிறது. அதை அணைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.