சீனாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது 3-வது நபருக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
சீனாவின் வுஹான் நகரை மையமாக வைத்து பரவி வரும் கரோனா வைரஸ் உலக நாடுகளைக் கதிகலங்க வைத்து வருகிறது. இதுவரை 20 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கேரளாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் சீனாவின் வுஹான் நகரில் தங்கிப் படித்து வந்தனர். அவர்கள் முதல் கட்டமாக ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்த வரப்பட்டனர். இதில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு மருத்துவச் சோதனை நடத்தியதில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததையடுத்து, அவரும் ஆழப்புலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது உறுதியானது.
கேரள சட்டப்பேரவை இன்று கூடியதும், சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா, கரோனா வைரஸ் குறித்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 3-வது நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டம் காங்கநாடு பகுதியில் ஒரு இளைஞருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர் வுஹான் நகரில் மருத்துவம் படித்து வருகிறார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது.
இதற்கு முன் 2 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இருவருமே வுஹான் நகரில் மருத்துவம் பிடித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் திருச்சூர், ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நல்ல உடல் நிலையில் இருக்கிறார்கள்.
தற்போதுள்ள சூழலில் நிபா, டெங்கு தாக்குதல் போன்று கரோனா வைரஸுக்கு எந்தவிதமான மருந்தும் இல்லை. வுஹான் நகரில் இதுபோன்று கரோனா வைரஸ் குறித்து அறிந்தவுடன், கேரள மாநிலத்தில் படிக்கும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எந்தச் சூழலையும் சமாளிக்க அரசு தயாராக இருக்கிறது.
தற்போதுள்ள சூழலில், கேரளாவில் 1,925 பேர் அவர்கள் வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 25 பேர் மருத்துவமனையில் தனி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றனர். சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் வரும் கேரள மக்களை அடையாளம் கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது.
சீனாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மனேசரில் வசதிகள் இல்லை என்று கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் புகார் தெரிவித்தார்கள். அதுகுறித்து மத்திய அரசிடம் பேசியுள்ளோம்".
இவ்வாறு ஷைலஜா தெரிவித்தார்.