இந்தியா

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் மரணம்: லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதி சிக்கினார் - ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் புதன்கிழமை திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 2 வீரர்கள் இறந்தனர். பதில் தாக்குதல் நடத்தியதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதி ஒருவருரை உயிருடன் பிடித்தனர்.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின்போது அஜ்மல் கசாப் என்பவரை மட்டும் உயிருடன் பிடித்தனர். அதன் பிறகு உயிருடன் பிடிபட்ட முதல் தீவிரவாதி இவர் தான்.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உதம்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று காலையில் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் வாகனங்களில் சென்று கொண்டிருந்த 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 11 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

சுதாரித்துக்கொண்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் சில மணி நேரம் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர்.

இதற்கிடையில் மற்றொரு தீவிரவாதி சிலரை பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் ஒன்றில் தஞ்சமடைந்தார். உடனடியாக அங்கு ராணுவ வீரர்கள், போலீஸார் விரைந்து சென்று கடும் போராட்டத்துக்கு இடையில் தீவிரவாதியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கைதான நபர் பாகிஸ்தானின் பைசலாபாத் நகரைச் சேர்ந்த முகமது நவேத் என்பதும் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. நவேத் உருது மற்றும் பஞ்சாபி மொழி பேசுகிறார். அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நவேத் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று உதம்பூர் துணை ஆணையர் ஷாகித் இக்பால் சவுத்ரி தெரிவித்தார்.

4 தீவிரவாதிகள் ஊடுருவல்

கடந்த 12 நாட்களுக்கு முன்பு முகமது நவேத் உட்பட 5 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து சென்றுள்ளனர். 3 பேர் பஞ்சாப் மாநிலம் தினா நகர் பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் 3 பேரையும் பஞ்சாப் போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர். நவேத் மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஆகிய இருவரும் உதம்பூரில் நேற்று தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்தது எப்படி?

உதம்பூர் காவல் துறை ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி கூறும்போது, “தாக்குதல் நடந்த இடத்திலிருந்து தப்பிய தீவிரவாதி 5 பேரை பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் அந்த பிணைக் கைதிகளின் உதவியுடன் அந்த தீவிரவாதியை கைது செய்தோம்” என்றார்.

          
SCROLL FOR NEXT