டெல்லியின் ஷாஹின் பாக் - நொய்டா சாலையை திறக்கக் கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார். படம்: பிடிஐ 
இந்தியா

ஷாஹின் பாக் அருகே உள்ள காலிந்தி-நொய்டா சாலையை திறக்கக் கோரி போராட்டம்

செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள காலிந்தி கஞ்ச் - நொய்டா சாலையை திறக்கக் கோரி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், டெல்லியில் உள்ள ஷாஹின் பாக் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக ஷாஹின் பாக் பகுதி, ஒன்றரை மாதத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்து வருகிறது. மேலும், அங்கு போராட்டம் நடைபெறுவதால் காலிந்தி கஞ்ச் - நொய்டா சாலையை போலீஸார் மூடியுள்ளனர். இதனால், அப்பகுதியிலிருந்து நொய்டா செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவர்களும், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும் தினமும் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சாலையை திறக்கக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

SCROLL FOR NEXT