உத்தரப் பிரதேசம் லக்னோவில் அந்தராஷ்ட்ரிய இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் ரஞ்சித் பச்சன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து லக்னோ போலீஸ் இணை ஆணையர் நவீன் அரோரா நிருபர்களிடம் கூறியதாவது:
"உத்தரப் பிரதேச மாநில இந்து மகாசபா அமைப்பின் தலைவர் ரஞ்சித் பச்சனும், அவரின் உறவினர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவும் இன்று காலை நடைப்பயிற்சி சென்றனர். அப்போது பரிவர்த்தன் சவுக் எனும் பகுதியில் இருவரும் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் இருவரையும் சுட்டனர். இதில் ரஞ்சித் பச்சனின் உறவினர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவுக்கும் கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
துப்பாக்கியால் சுட்டவுடன் சம்பவ இடத்திலேயே ரஞ்சித் பச்சன் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுட்டவர்கள் இருவரின் செல்போன்களையும் பறித்துச் சென்றனர்.
விசாரணையின் முதல்கட்டத் தகவலில் கொல்லப்பட்ட ரஞ்சித் பச்சனுக்கும் அவரின் மனைவி கலிந்தி சர்மாவுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக ரஞ்சித் மீது கோரக்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்கும் உள்ளது. அதனால் முன்விரோதம் காரணமாகக் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம்.
அதுமட்டுமல்லாமல் கொல்லப்பட்ட ரஞ்சித் பச்சன், இதற்கு முன் சமாஜ்வாதிக் கட்சியில் இருந்தார். 2002-09 ஆம் ஆண்டுவரை அந்தக் கட்சியில் முக்கியப் பதவியிலிருந்து பல்வேறு போராட்டங்கள், பேரணியில் பங்கேற்றுள்ளார்.
அதன்பின் ரஞ்சித் பச்சன் தனியாக விஸ்வ இந்து மகாசபா எனும் அமைப்பைத் தொடங்கி அதில் தேசியத் தலைவரானார். இந்தச் சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள அனைத்துக் கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். இந்தக் கொலைக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் விசாரித்து வருகிறோம். கொலையாளியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு அரோரா தெரிவித்தார்.