நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொலைநோக்கு திட்டங்களுடன் கூடிய சிறப்பான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர்தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு வரி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்துவதுடன் வேலைவாய்ப்பையும் பல மடங்கு அதிகரிக்கும்.
குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச நிர்வாகம்' என்ற மத்திய அரசின் இலக்கை அடைவதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வழிகோலும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், வரி நடைமுறையை எளிதாக்குவதற்கான அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறது. மொத்தத்தில், இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொலைநோக்கு திட்டங்களுடன் உருவாக்கப்பட்ட சிறப்பான பட்ஜெட் ஆகும். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார். - பிடிஐ