இந்தியா

மொகஞ்சதாரோவின் எழுத்துகள் என்ன மொழி?- நிர்மலா சீதாராமனின் வரலாற்றுக் கருத்தால் சர்ச்சை

ஆர்.ஷபிமுன்னா

சிந்துசமவெளி நாகரிகத்தின் மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக் களின் மொழி என்ன என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது. இந்தச் சூழலில், அதன் சில வார்த்தைகளுக்கு பொருளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

உலகின் பழமையான நாகரிகமாகக் கருதப்படுவது சிந்துசமவெளி நாகரிகம். இது, ஆங்கிலேயர் காலத்தில் இந்தியா மற்றும்பாகிஸ்தான் நாடுகளில் அமைந்துள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளின் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் தெரிந்தது. இந்த நாகரிகம் திராவிடர்களை சேர்ந்ததா அல்லது ஆரியர்களை சேர்ந்ததா என்ற சர்ச்சையும் தொடர்கிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகை ஓவிய எழுத்துக்களின் மொழி என்ன என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

எனினும், இந்த எழுத்துக்கள் திராவிட நாகரிகத்தின் தமிழ் எழுத்துக்கள் என உலகப்புகழ் புகழ்பெற்ற பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவை எதையும், மத்திய அரசு ஏற்று அதிகார பூர்வமாக அறிவிக்காமல் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டது சர்ச்சையாகி உள்ளது.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் பேசும்போது, ‘‘சரஸ்வதி சிந்து நாகரிகத்தில் சில முத்திரைகள் குறிப்பிடத்தக்கவை. கிறிஸ்து பிறப்பதற்கு முன் 3,300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இதன் முத்திரைகளில் உள்ள வார்த்தைகள் படித்தறியப்பட்டுள்ளன. அதில் உள்ள வார்த்தைகள் காலம் காலமாக உலோகவியல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியா செழுமையாக விளங்கியதை காட்டுகிறது’’ எனத் தெரிவித்தார்.

சிந்துசமவெளி நாகரிக எழுத்துக்களின் வார்த்தைகளை அதன் பொருளுடன், ‘சிரேனி’ என்பது வணிகச்சங்கம், ‘சேத்தி’ என்பது மொத்த வியாபாரி, ‘தக்கர குலுமி’ என்பது கொல்லன், ‘பொத்தர்’ என்பது உலோக மதிப்பிட்டாளர் எனக் குறிப்பிட்டார். இதை மத்திய பொது பட்ஜெட் உரையின்அறிவிப்புகளுக்கு உதாரணங்களாகவும் எடுத்துரைத்தார். அத்துடன், ஹரப்பா நாகரிகம் என்றழைக்கப்படுவதை ‘சரஸ்வதி சமவெளி நாகரிகம் எனக் குறிப்பிட்டது தவறான வரலாற்று கருத்துக்கள் என சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் இந்திய தொல்லியல் துறையில் ஓய்வுபெற்ற இயக்குநரான தமிழர் டி.தயாளன் கூறியதாவது: சிந்துசமவெளி அல்லது ஹரப்பா நாகரிகம் என்பதில் சரஸ்வதி என சேர்த்துக் கூறுவது நாடாளுமன்றத்தில் தவறான வரலாற்றை பதிவுசெய்யும் முயற்சி. இதில் அவர் அந்நாகரிகத்தின் சில வார்த்தைகளை அர்த்தத்துடன் குறிப்பிட்டது சரியல்ல, ஏனெனில், இதில் எழுதப்பட்ட ஓவிய எழுத்துக்களின் மொழி என்ன என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT