நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் மத்திய பொருளாதாரச் செயலர் அதானு சக்கரவர்த்தி. படம்: பிடிஐ 
இந்தியா

வருமான வரிச் சலுகைகளை எதிர்காலத்தில் நீக்க திட்டம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

எதிர்காலத்தில் வருமான வரிச் சலுகைகள் நீக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் கையில் பணம் இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அதை கருத்திற் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரியை குறைத்து சிரமங்களை நீக்க மத்திய அரசு விரும்புகிறது. கடந்த செப்டம்பரிலேயே கார்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுவிட்டன. தற்போது வருமான வரி விகிதமும் குறைக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் முதலீடு தேவைப்பட்டால் ஒதுக்கப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை தனிநபர் வருமான வரி விகிதம் குறைவாகவும் எளிமையாகவும் உள்ளது. நேர்மையானவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வருமான வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு விலக்கல் திட்டங்களின் பயன்கள் அடுத்த சில மாதங்களில் தெரியும். எனினும் இதன் முழுமையான பயன்கள் அடுத்த நிதியாண்டில் கிடைக்கும்.

ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் நிதிப்பற்றாக்குறை குறையும். பங்குச் சந்தையில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் வருமான வரிச் சலுகைகளை நீக்க திட்டமிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT