இந்தியா

ரூ.18,600 கோடியில் பெங்களூரு புறநகர் ரயில் திட்டம்

இரா.வினோத்

பெங்களூருவாசிகள் கடந்த 37 ஆண்டுகளாக எதிர்ப்பார்த்து காத்திருந்த புறநகர் ரயில் சேவை ரூ.18,600 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நகரமாக விளங்கும் பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பேருந்து, மெட்ரோ ரயில் ஆகியவற்றை போல புறநகர் ரயில் சேவையையும் கொண்டு வர வேண்டும் என பெங்களூருவாசிகள் கடந்த 37 ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2018 - 19 பட்ஜெட்டின் போது அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ரூ. 17 ஆயிரம் கோடி செலவில் பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இதையடுத்து, புறநகர் ரயில் திட்டத்திற்கான‌ வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட‌து. 2019ல்- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புறநகர் ரயில் திட்டத்துக்கு முதல்கட்டமாக‌ ரூ.1 கோடி ஒதுக்கினார்.

இதையடுத்து, நிர்மலா சீதாராமனை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்து, “புறநகர் ரயில் திட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. நீங்கள் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இந்த திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கி, புறநகர் ரயில் சேவையை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெங்களூருவில் ரூ.18,600 கோடி செலவில் 148 கிமீ தொலைவுக்கு புறநகர் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். இதற்கான கட்டுமான செலவில் மத்திய அரசு சார்பில் 20 சதவீதம் வழங்கப்படும். 60 சதவீதம் அளவுக்கு மறைமுக நிதியுதவி ஏற்பாடு செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, “இந்த திட்டத்தினால் அண்டை மாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தமாக பெங்களூரு வந்து செல்வோர் அதிகளவில் பயனடைவார்கள். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு, தொழில்த்துறையில் முன்னேற்றம் ஏற்படும். பெங்களூரு மேலும் வளர்ச்சி அடையும். போக்குவரத்து நெரிசல் வெகுவாக‌ குறையும்''என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, “கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெங்களூரு புறநகர் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்த முறையாவது அதற்கான பணிகளை தொடங்கி, அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT