கோப்புப்படம் 
இந்தியா

சோலார் பம்புகள் உருவாக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி; விவசாயிகள் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும்: நிதியமைச்சர் உறுதி

பிடிஐ

பிரதமர் கிசான் உர்ஜா சுரக்சா உதான் மகாபியான் திட்டத்தின் மூலம் 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளிமூலம் பம்பு செட்டுகள் அமைக்க நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் துறைக்கான திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், " 2020-2021 ஆம் ஆண்டில் பிரதமர் கிசான் உர்ஜா சுரக்சா உதான் மகாபியான் திட்டத்தின் மூலம் 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளி மூலம் பம்பு செட்டுகள் அமைக்க நிதியுதவி அளிக்கப்படும்.

15 லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் வாங்க நிதியுதவி அளிக்கப்படும். இதற்கு முந்தைய பாஜக அரசால் கடந்த பிப்ரவரி மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது ரூ.34,422 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய டீசலையும், மண்ணெண்ணையையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை. தங்கள் நிலத்தில் சோலார் மின்திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை விற்பனை செய்யலாம். விவசாயிகள் தங்களின் பயனற்றுக் கிடக்கும் நிலத்தில் சோலார் மின்திட்டத்தை அமைக்கலாம்.

பிரதமர் கிசான் உர்ஜா சுரக்சா உதான் மகாபியான் திட்டம் 3 பிரிவுகளை உள்ளடக்கியது. இந்த 3 திட்டங்கள் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் 25,720 மெகாவாட் மின்சாரம் உருவாக்க மதிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க அரசு திட்டமிட்டுள்ளது. 6.11 கோடி விவசாயிகளுக்கு காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த, வேளாண் உதவி நடவடிக்கைகள் மாநில அரசுகளுடன் உதவியுடன் நடைபெற வேண்டும்.

விவசாயிகள், வேளாண்மை ஆகியவற்றுக்காக 16 மைய அம்சங்களை வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. மாதிரி விவசாய சட்டங்கள், நீர் பற்றாக்குறை இருக்கும் 100 மாவட்டங்களுக்கு உதவி அளித்தல், விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட்களை பயன்படுத்த ஊக்கமளித்தல், உரங்களை சரிவிதத்தில் பயன்படுத்த ஆலோசனை உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாகும்’’.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT