நிர்மலா சீதாராமன் : படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

விவசாயத்துக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; காய்கறி, பழங்களைக் கொண்டு செல்ல விமானம், தனி ரயில்: நிர்மலா சீதாராமன் தகவல்

பிடிஐ

2020-21 ஆம் நிதியாண்டில் வேளாண்துறைக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2020-21 ஆம் ஆண்டின் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
நிர்மலா சீதாராமன் பேசுகையில், "2020-2021 ஆம் நிதியாண்டில் வேளாண்துறைக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் மறுநிதியளிப்புத் திட்டம் விரிவு செய்யப்படும்.

தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் காய்கறிகள், எளிதில் அழுகும் பொருட்களைச் சேமிக்க சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும். அதுமட்டுமல்லாமல் காய்கறிகள், பழங்கள், உள்ளிட்ட அழுகும் பொருட்களைக் கொண்டு செல்ல தனி ரயில் ஏற்படுத்தப்படும்.

அதுமட்டுமல்லாமல், வேளாண் பொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக தனியாக விமான சேவை உருவாக்கப்படும். இதற்காக விமானப் போக்குவரத்து துறையில் சார்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலையை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தோட்டக்கலை விவசாயம் மேம்படுத்தப்படும். 311 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி தோட்டக்கலை மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடித் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சுய உதவிக் குழுக்களுக்கு உதவி செய்யப்படும். கிராமங்களில் மீன்கள் பதப்படுத்தும் கூடம் உருவாக்கப்படும்.

மத்திய அரசின் முயற்சியால் 27.1 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்’’.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT