இரா.வினோத்
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது அவரது சீடர்கள் லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் ஆகியோர் கடந்த 2010-ம் ஆண்டு பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தனர். 50 வாய்தாக்களுக்கு மேல் வழங்கியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு லெனின் கருப்பன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த மனு நேற்று நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி குன்ஹா, “நித்யானந்தா எங்கே இருக்கிறார்? அவர் இந்தியாவில் இல்லை என்றால் வேறு எங்கு இருக்கிறார்? அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி, போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு தப்பியதாக கூறப்படுவது உண்மையா? அவருக்கு எதிரான ப்ளூ கார்னர் நோட்டீஸ் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் 50 வாய்தாக்களுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் போது, அவர் மீது ஏன்நடவடிக்கை எடுக்கவில்லை? என சரிமாரியாக கேள்வி எழுப்பினார்.
பிறகு, “கர்நாடக போலீஸார் இந்த முறை அவரை நேரில் சந்தித்து சம்மன் அளிக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை போலீஸார் வரும் திங்கள்கிழமை பிற்பகலுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.