மகாத்மா காந்தி கொலை குறித்து ‘தி இந்து’ சார்பில் வெளியாகி உள்ள புத்தகத்தை புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’வின் சார்பில் சிறப்பு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ‘மகாத்மா காந்தி படுகொலை - விசாரணையும் தீர்ப்பும் 1948 -49’ என்ற புத்தகத்தை புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், வியாழக்கிழமை மாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ‘தி இந்து குரூப் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட்’ தலைவர் என்.ராம் முன்னிலையில் வெளியிட்டார்.
456 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம், மகாத்மா காந்தி கொலையில் தொடங்கி, அதுபற்றி விசாரணை நடத்திய கபூர் கமிஷன் விசாரணை அறிக்கை வரை நடந்த சம்பவங்களைத் தொகுத்து அந்த காலகட்டத்தில் வாசகர்களை பயணிக்க வைக்கிறது. மேலும் காந்தி கொலையைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்கள், கொலை தொடர்பாக ஆர்டிஐ மனு மூலம் பெறப்பட்ட தகவல், காந்தியின் கொலை குறித்து மறுபடியும் விசாரிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு போன்ற தகவல்களும் வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. புத்தகம் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது. வாசகர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
காந்தி கொலை பற்றிய ‘தி இந்து’வின் புத்தகத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டது ஒரு சிறப்பான நிகழ்வு. காரணம்.. கொலை நடந்தபோது எம்.எஸ்.சுவாமிநாதன் அங்கு இருந்து காட்சிகளை நேரடியாக பார்த்தவர். இதுகுறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியதாவது:மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள் என் வாழ்வில் மிகவும் துயரமான நாள். அது மிகவும் உணர்வுபூர்வமான நேரம்.
டெல்லியில் உள்ள பிர்லா ஹவுசில் காந்தி தலைமையில் பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும். சம்பவம் நடந்த அன்று முதலில் நான் அங்கு செல்வதாக இல்லை. யோசனைக்குப் பிறகு பிர்லா ஹவுஸ் சென்றேன். பிரார்த்தனை கூட்டங்களில் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள். அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். அன்றும் அப்படித்தான் பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நான் பின்னால் அமர்ந்து கொண்டிருந்தேன். திடீரென கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது.
‘காந்திஜி சுடப்பட்டார்’.. என்று கூட்டத்தில் இருந்து குரல் கேட்டது. 15 நிமிடங்கள் கழித்து மவுண்ட்பேட்டன் வந்தார். அரைமணி நேரம் கழித்து காந்தி இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் அந்த இடமே சோகமயமாக மாறியது. ஜவஹர்லால் நேருவும் வல்லபபாய் படேலும் அடுத்த ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாமல் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மனம் கலங்கினர். அந்த சமயத்தில் மவுண்ட்பேட்டன் பொறுப்பில் இருந்தார். காந்தியின் உடல் பீரங்கி வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அதிகாரப்பூர்வமாக துக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் அது அவசியமானது.
இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.
மேலும், கும்பகோணத்தில் தனது வீட்டுக்கு மகாத்மா காந்தி வந்ததையும் அப்போது, காந்தியின் தலித் மேம்பாடு, கோயில் நுழைவு போன்ற முற்போக்கான திட்டங்களுக்கு பயன்படும் வகையில் தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, கையில் அணிந்திருந்த தங்கக் காப்பு ஆகியவற்றை காந்தியிடம் கழற்றிக் கொடுக்கும்படி தனது தாயார் கூறியதையும் சொல்லி, பழைய நினைவுகளில் மூழ்கினார் எம்.எஸ்.சுவாமிநாதன்.