டெல்லி ஜாமியா அருகே சிஏஏ எதிர்ப்புப் பேரணியினரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபருக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லியில் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் அருகே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி நடைபெற்றது, அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ‘இங்குதான் உங்கள் சுதந்திரம் உள்ளது’ என்று கூறிய படியே இங்குமங்கும் ஓடியவர் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். அப்போது தலைக்கவசம், உள்ளிட்டவைகளுடன் ஆயுத போலீஸ் படை அங்குதான் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஷதாப் ஃபாரூக் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.
நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ஜாமியா துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு யார் பணம் கொடுத்தது? என்று கேட்டார்.
கேஜ்ரிவால் விமர்சனம்
இச்சம்பவம் குறித்து கேஜ்ரிவால் இன்று ட்வீட்டரில் கூறியுள்ளதாவது:
''நாங்கள் குழந்தைகளின் கைகளில் பேனாக்களையும் கணினிகளையும் கொடுத்துள்ளோம், தொழில் முனைவோர் ஆகும் கனவுகள் அவர்கள் கண்களில்! ஆனால் மற்றவர்கள் துப்பாக்கிகள் மற்றும் வெறுப்பையும் தருகிறார்கள். உங்கள் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள்? பிப்ரவரி 8 அன்று கூறுங்கள்!''
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.