காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டோல் பிளாசா அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இச்சம்பவத்தில் ஒரு போலீஸார் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டோல் பிளாசாவில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை குறித்து காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் கூறியதாவது:
இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
நக்ரோட்டாவின் பான் பகுதியில் உள்ள டோல் பிளாசா அருகே போலீஸார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீநகர் நோக்கிச் செல்லும் லாரி ஒன்றுவேகமாக வந்தது. அதனை போலீஸ் குழு தடுத்து நிறுத்தினர்.
இதனால் கோபமடைந்த தீவிரவாதிகள் போலீஸாரை நோக்கி சுட்டனர். அதைத் தொடர்ந்து போலீஸாரும் பதிலடி அளித்தனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு போலீஸார் காயமடைந்துள்ளார்.
அடுத்தடுத்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் தப்பியோடியிருக்கலாம் என்று நம்புகிறோம்.
அங்கிருந்து நான்கு ஆயுதங்கள் மற்றும் சில வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கத்துவா மாவட்டத்தில் ஹிராக்நகரில் உள்ள சர்வதேச எல்லையிலிருந்து இவ்வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு செல்லும் வழியில் புதிதாக ஊடுருவிய குழுவின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிறைய பேர் உள்ளனர்.
இவ்வாறு காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பின்னர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நக்ரோட்டாவில் உள்ள பள்ளிகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.