நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும். குறிப்பாக பொருளாதாரம் மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற வேண்டும்.
அதேசமயம் விவாதங்கள் ஆரோக்கியமாக நடைபெற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் வலிமையான முறையில் இந்த கூட்டத் தொடரில் செயலாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தொடரில் முழுக்க முழுக்க பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்துவோம்.’’ எனக் கூறினார்.