போராட்டங்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களால் நாட்டுக்கும், சமூகத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
மத்தியில் புதிய அரசு பதவியேற்ற முதல் 7 மாதங்களிலேயே பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அயோத்தி வழக்கு தீர்ப்பில் பொதுமக்கள் காட்டிய முதிர்ச்சி பாராட்டுக்குரியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது லடாக் மற்றும் காஷ்மீரின் சம வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் ஆகும். போராட்டங்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களினால் நாட்டுக்கும், சமூகத்தினருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நாட்டு மக்களின் உணர்வுகளை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார். குடியரசுத் தலைவர் உரையின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.