மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் நெஸ்லே நிறுவனத்திடம் ரூ.640 கோடி இழப்பீடு கோரும் வழக்கை கைவிடமாட்டோம் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் உட்பட 9 வகை நூடுல்ஸ்களில் அளவுக்கு அதிகமாக காரீயம் கலந்திருப்பது ஆய்வக சோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் அமைப்பு கடந்த ஜூன் 5-ம் தேதி நெஸ்லே நூடுல்ஸ்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்தது.
மேலும் விதிகளை மீறிய அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.640 கோடி இழப்பீடு கோரி தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நெஸ்லே முறையிட்டது. இம்மனுவை கடந்த 13-ம் தேதி விசாரித்த நீதிபதிகள், மேகி உட்பட 9 நூடுல்ஸ்கள் மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்கியது.
இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவால் இழப்பீடு கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை கைவிடும் திட்டம் இல்லை. அந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம். மேலும் சில ஆதாரங்களை திரட்டி வருகிறோம். அப்போது இன்னும் கூடுதலாக இழப்பீடு கோருவோம் என்று அவர் தெரிவித்தார்.