அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக சர்ச்சைக்குரிய குழந்தைகள் நல மருத்துவர் கபீல் கான் நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு கபீல் கான் வந்தபோது மும்பை போலீஸாரும் உ.பி. சிறப்பு அதிரடி படையினரும் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் டாக்டர் கான், உ.பி.யின் அலிகருக்கு அழைத்து வரப்படுவார் என லக்னோவில் சிறப்பு அதிரடிப்படை நேற்று தெரிவித்தது. கடந்த 2017 ஆகஸ்டில் உ.பி. மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரு வாரத்தில் 63 குழந்தைகள் உயிரிழந்தன.
அப்போது குழந்தைகள் மருத்துவப் பிரிவில் கபீல் கான் பணியாற்றினார். இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து உயரதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் குழந்தைகள் உயிரிழப்பில் அவருக்கு தொடர்பில்லை என அரசு நடத்திய விசாரணையில் தெரியவரவே 2 ஆண்டுக்குப் பிறகு அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.