அசாம் மாநிலம் குவாஹாட்டியில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி தீவிரவாத அமைப்பின் 3 குழுக்கள் ஒப்படைத்த ஆயுதங்கள் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. படம்: பிடிஐ 
இந்தியா

அசாமில் என்டிஎப்பி அமைப்பைச் சேர்ந்த 1,615 பேர் ஆயுதங்கள் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

அசாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி) தீவிரவாத அமைப்பின் 3 அதிருப்தி குழுக்களைச் சேர்ந்த 1,615 பேர் தங்களிடம் இருந்த ஆயுதங்களை அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் மற்றும் நிதி அமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா முன்னிலையில் ஒப்படைத்தனர்.

3 தினங்களுக்கு முன் என்டிஎப்பி மற்றும் அனைத்து போடோ மாணவர் யூனியன் ஆகிய போடோ அமைப்புகளுடன் மத்திய அரசும் அசாம் அரசும் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டன.

அசாமுக்கும் மாநில மக்களுக்கும் எதிர்காலம் பொற்காலமாக மாற இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் போடோ அமைப்புகளை சேர்ந்த 1,615 பேர் நேற்று ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஏகே ரக துப்பாக்கிகள், லகுரக துப்பாக்கிகள் உட்பட 4800-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இவற்றில் அடங்கும்.

என்டிஎப்பி (முற்போக்கு) பிரிவில் 836 பேர், என்டிஎப்பி ரஞ்சன் டைமரி பிரிவில் 579 பேர், பி.சவ்ரைக்வரா தலைமையிலான என்டிஎப்பி (எஸ்) பிரிவில் 200 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து தீவிரவாத பாதையிலிருந்து விலகியுள்ளனர்.

SCROLL FOR NEXT