இந்தியா

போலி பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி உ.பி.யில் ரூ.100 கோடி ஜிஎஸ்டி மோசடி: முக்கிய குற்றவாளி கைது

ஆர்.ஷபிமுன்னா

உத்திரபிரதேசத்தின் ஆக்ராவில் போலி பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி ரூ.100 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி வரி மோசடி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பத்து மாநிலங்களின் 23 நகரங்களில் செய்யப்பட்டதன் முக்கியக் குற்றவாளி ஆக்ராவில் கைதாகி உள்ளார்.

மத்திய ஜிஎஸ்டி துறையின் அதிகாரிகள் நேற்று ஆக்ராவின் மூன்று இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் செக்டர் 3-ஏ வில், வீட்டு வளர்ச்சிக் காலனியில் ஏராளமான போலி தஸ்தாவேஜ்கள் மற்றும் ஜிஎஸ்டி ரசீதுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

போலி நிறுவனங்களை சேர்ந்த இவற்றின் மூலம் ரூ.691 கோடி மதிப்பிற்கு எந்தவிதமானப் பொருட்களும் இன்றி விற்பனை காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசிற்கு ரூ.100 கோடி வரையிலான மதிப்பில் ஜிஎஸ்டி வரி கட்டாமல் ஏமாற்றப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய குற்றவாளியாக ஆக்ராவில் சந்திர பிரகாஷ் கிருபாளனி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று காலை ஆக்ராவின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தமிழகத்திலும் தொடர்பு

மொத்தம் 23 நகரங்களில் 120 போலி நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதில், சந்திர பிரகாஷிற்கு துணையாக உ.பி., குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மகராஷ்டிரா, தெலங்கானா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பத்து மாநிலங்களில் ஆட்கள் செயல்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர். இதே போன்ற வழக்கில் கடந்த வருடம் உ.பி.யின் ஆக்ராவில் சஞ்சய் நிகாம் என்பவர் முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

SCROLL FOR NEXT