மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம் 
இந்தியா

ரூ.2 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்: நீண்டகால வரிப் பிரச்சினைகளுக்கு 'புதிய மன்னிப்பு திட்டம்'; பட்ஜெட்டில் அறிமுகம்

ஐஏஎன்எஸ்

வருமான வரித்துறையில் நீண்டகாலமாக நீடித்து வரும் கார்ப்பரேட் வரி, வருமான வரி தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க பட்ஜெட்டில் புதிய மன்னிப்பு அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் சிக்கி இருக்கும் மத்திய அரசு இந்த முறையின் மூலம் நிதி திரட்ட முடியும் என நம்புகிறது

மத்திய அரசு வருமான வரித்துறையில் ஏற்கெனவே அறிமுகம் செய்து செயல்படுத்திவரும் சப்கா விஸ்வாஸ் திட்டத்தைப் போன்றே இந்த புதிய திட்டமும் இருக்கும் எனத் தெரிகிறது. சேவை வரி, கலால் வரி ஆகியவற்றில் அரசுக்கு நீடித்து வரும் பிரச்சினைகளை மட்டும் தீர்க்க இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

சுங்கத்துறை மற்றும் கலால் வரிப் பிரிவில் ஏராளமான வரி நிலுவைகள் மத்திய அரசுக்கு இருக்கின்றன. இந்த இரு பிரிவுகளில் இருந்து மட்டும் வரி நிலுவைகள் தொடர்பான பிரச்சினைகளை மத்திய அரசு தீர்த்து வைத்தால் ரூ.38 ஆயிரம் கோடி கிடைக்கும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் கார்ப்பரேட் வரிகள், தனிநபர் வருமான வரி போன்றவற்றிலும் அரசுக்கும், நிறுவனங்களுக்கும், தனிமனிதர்களுக்கும் இடையே பிரச்சினை தீர்க்கப்படாமல் நீடித்து வருகிறது. இந்த வகையில் நீடித்து வரும் வரி தொடர்பான பிரச்சினைகளை அரசு சமரசத் தீர்வு மூலம் தீர்வு கண்டால் ரூ.5 லட்சம் கோடி கிடைக்கும் எனத் தெரிகிறது.

இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்தினால், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிமனிதர்கள் முன்வந்து அதிகமாகத் தீர்வு காணும் போது, அரசுக்குக் குறைந்தபட்சமாக ரூ.2 லட்சம் கோடி அளவுக்குக் கிடைக்கும் என்று நிதியமைச்சகத்தில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வரி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களும், தனிமனிதர்களும் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றனர்.

இதனால் வழக்கு நீண்டகாலத்துக்கு இழுக்கப்படுகிறது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட வரி வருவாய் இலக்குகளை அடைய முடியவில்லை. இதனால் புதிய மன்னிப்பு அளிக்கும் திட்டத்தின் மூலம் கிடப்பில் இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து வரி வசூலை அதிகரிக்க மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்த சப்கா விஸ்வாஸ் திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கோடி இலக்கு வைத்துச் செயல்பட்டு அதை மத்திய அரசு அடைந்தது. அதேபோன்ற திட்டத்தை இந்த முறையும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் எனத் தெரிகிறதது.

சப்கா விஸ்வாஸ் திட்டத்தின் மூலம் அரசுடன் நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள 1.89 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT