கல்பேட்டா நகரில நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

நான் இந்தியரா என்று தீர்மானிக்க மோடி யார், அங்கீகாரம் யார் கொடுத்தது?: ராகுல் காந்தி கேள்வி

பிடிஐ

பிரதமர் மோடியும், நாதூராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள ராகுல் காந்தி, " அரசியலமைப்பைப் பாதுகாப்போம்" என்ற பெயரில் இன்று கல்பேட்டா நகரில் இன்று பேரணி நடத்தினார். அப்போது தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டம், கொண்டவர இருக்கும் என்ஆர்சி, என்பிஆர் போன்றவற்றின் மூலம் இந்தியாவில் பிறந்து வாழ்ந்துவரும் இந்தியர்கள், தாங்கள் இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். இந்தியர்களை இந்தியர்கள்தான் என்று நிரூபிக்கக் கூற மோடி யார்?

இந்தியர்கள் இந்தியர்கள்தான் என்று முடிவு செய்வதற்கு மோடி யார்? இந்தியர்களின் குடியுரிமை குறித்துக் கேட்க மோடிக்கு யார் அங்கீகாரம் அளித்தது. எனக்குத் தெரியும் நான் இந்தியன், நான் யாரிடமும் சென்று எனது குடியுரிமையை நிரூபிக்க விரும்பவில்லை. இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களும் தாங்கள் இந்தியர்கள்தான் நிரூபிக்கத் தேவையில்லை.

இன்று, அறியாமையில் இருக்கும் ஒரு மனிதர் மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களுக்குச் சவால் விடுகிறார். நாட்டில் வெறுப்பான சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். மகாத்மா காந்திய கொலை செய்த நாதுராம் கோட்சே, பிரதமர் மோடி இருவரும் ஒரே சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரின் சித்தாந்தத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. ஆனால், கோட்சேயின் சித்தாந்தத்தின் மீது தனக்கும் நம்பிக்கை இருக்கிறது என்று வெளிப்படையாகக் கூற பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்

SCROLL FOR NEXT