இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்கிற சிஏஏ மீதான விவாதங்களை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளனர். நேற்று இரவு நடந்த விவாதங்களை அடுத்து இந்தியாவின் சிஏஏ மீதான வாக்கெடுப்பை மார்ச் 2020 மத்தி வரை நடத்த வேண்டாம் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் முடிவெடுத்துள்ளது.
வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டதை ‘இந்தியாவுக்குக் கிடைத்த ராஜீய வெற்றி’ என்பதாக அரசு வட்டாரங்கள் வர்ணித்துள்ளது.
இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13ம் தேதி பிரஸ்ஸல்ஸ் செல்கிறார். இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினர், ஐரோப்பிய மக்கள் கட்சியைச் சேர்ந்த மைக்கேல் காலெர், இந்தியாவும் இந்த தீர்மானத்தில் பங்கேற்கும் விதமாக வாக்கெடுப்பை தள்ளி வைக்கும் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
“இந்த விவகாரம் இன்னும் முடியடையவில்லை, உச்ச நீதிமன்றம் நிறைய கேள்விகளை அரசுக்கு எழுப்பியுள்ளது. இதற்கு அரசு தரப்பு பதில்கள் என்னவென்று தெரியும் வரை நாம் காத்திருக்க வேண்டும். மேலும் இந்திய அமைச்சர்களிடம் குடியுரிமைச் சட்டம் குறித்து பிப்ரவரியில் நமக்கு விவாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.” என்று கூறிய காலெர், தீர்மானத்தின் மீதான வாக்கெட்டுப்பை தள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இத்தகைய தீர்மானத்துக்காக பாகிஸ்தானையும், பிரிட்டிஷ் எம்.இ.பி. ஷபிக் மொகமது வேறுபட்ட 6 தீர்மானங்களை முன் மொழிந்துள்ளதையும் இந்திய அரசு தரப்பு வட்டாரங்கள் விமர்சித்துள்ளன.
இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் தங்கள் உறவுகளை மேலும் வலுவாக்கவும், வர்த்தக பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்:
இது குறித்து அரசு தரப்பினர், “சிஏஏ என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதனை ஜனநாயக நடைமுறைகளிலேயே இந்தியா கொண்டு வந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் புறவயமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று இந்திய அரசுத் தரப்புகள் தெரிவிக்கின்றனர்.
மார்ச் 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களைப் பொறுத்து வாக்கெட்டுப்பு நடைபெறும் என்று இப்போதைக்கு தெரிகிறது.