‘காஷ்மீர்’ எனும் பெயரில் மூன்றாவதாக ஒரு சர்ச்சைக்குரிய திரைப்படம் தயாரிக்கிறார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷியா மத்திய வக்ஃபு வாரியத்தின் தலைவரான வசீம் ரிஜ்வீ. இவர் ஏற்கனவே, அயோத்தி மற்றும் முகம்மது நபியின் மனைவி பற்றி எடுத்த திரைப்படங்களும் சர்ச்சைக்குள்ளாகின.
முஸ்லிம்களின் ஷியா பிரிவை சேர்ந்த முக்கியத் தலைவராக இருப்பவர் வசீம் ரிஜ்வீ. பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான ரிஜ்வீ, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்தான பின் ‘காஷ்மீர்’ எனும் பெயரில் ஒரு திரைப்படம் எடுத்து வருகிறார். இம்மாநிலத்தில் இருந்து விரட்டப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் வாழ்க்கை குறித்த இந்தத் திரைப்படத்தின் கதை சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதன் டிரைலர் நேற்று லக்னோவில் வெளியாகி உள்ளது. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இந்த இந்தி திரைப்படத்துக்கு இப்போதே எதிர்ப்புகள் கிளம்பத் துவங்கி விட்டன.
தனது திரைப்படம் குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் வசீம் ரிஜ்வீ கூறும்போது, ‘இப்படத்தில் இந்து பண்டிட்கள் காஷ்மீரில் பட்ட சித்ரவதைகளை சித்தரித்துள்ளோம். இவர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து காஷ்மீர் முஸ்லிம்கள் 1990-ம் ஆண்டுகளில் விரட்டி இருந்தனர். இதில் சுமார் 3 லட்சம் பண்டிட்கள் தம் சொந்த நாட்டில் அகதிகளாகும் சூழல் உருவானது’ என்று தெரிவித்தார்.
ரிஜ்வீயின் திரைப்படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், உ.பி. மற்றும் காஷ்மீரில் ஒட்டப்பட்டிருந்த அந்த திரைப்பட போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி காஷ்மீரில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் உயர் நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளன. எனவே, ரிஜ்வீயின் ‘காஷ்மீர்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சர்ச்சை கிளம்பியுள்ளது.
ராமஜென்ம பூமி
இதற்கு முன் ரிஜ்வீ எடுத்த இரண்டு திரைப்படங்களும் சர்ச்சையில் சிக்கியிருந்தன. அயோத்தி தீர்ப்புக்கு பின் அவர் ‘ராமஜென்ம பூமி’ எனும் பெயரில் ஒரு இந்தி திரைப்படம் எடுத்திருந்தார். இதில், அயோத்தியில் ராமர் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு சம்பந்தப்பட்ட முஸ்லிம்களின் சர்ச்சைக்குரிய சம்பவங்களை பின்னணியில் சேர்த்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு மத்திய அரசால் சட்டமும் இயற்றப்பட்ட முத்தலாக் முறை மற்றும் நிக்காஹ் ஹலாலா ஆகியவற்றை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகளையும் தனது திரைப்படத்தில் சேர்த்திருந்தார் ரிஜ்வீ.
இதற்கு முன் முஸ்லிம்களின் இறை தூதரான முகம்மது நபி, அவரது மனைவி குறித்து ‘ஆயிஷா’ என்னும் பெயரில் ஒரு இந்தி திரைப்படம் வெளியிட்டிருந்தார் ரிஜ்வீ. இந்தப் படம் தொடர்பாக சர்ச்சைகள் உருவாகி கிளம்பிய எதிர்ப்பால் இந்த திரைப்படம் திரை அரங்குகளில் வெளியிடப்படவில்லை. மாறாக, இணையதளத்தில் மட்டும் வெளியாகி இருந்தது.
கொலை மிரட்டல்
பாலிவுட்டில் அதிகம் பிரபல அடையாத நட்சத்திரங்கள் நடித்த இந்த மூன்று திரைப்படங்களையும் சனோஜ் மிஸ்ரா இயக்கி இருந்தார். தற்போது புதிய படத்தை வெளியிட இருக்கும் ரிஜ்வீக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.