தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜில் இமாமை 5 நாட்கள் குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறன. பாஜக சார்பில் குடியுரிமைச் சட்ட ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்திஙல் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜில் இமாமை பிஹார் மாநிலம் ஜகானாபாத்தில் டெல்லி போலீஸார் கைது செய்தனர். வட கிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் எனக் கூறி இவர் பேசிய வீடியோ பதிவு வெளியாகி வைரலானது.
இதன் அடிப்படையில் ஷார்ஜில் இமாம் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலும் தேடப்பட்டு வந்த ஷார்ஜில் இமாம் பிஹாரில் உள்ள ஜகானாபாத் மாவட்டத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து டெல்லி போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் ஷார்ஜல் இமாமை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஷார்ஜல் இமாமை 5 நாட்கள் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.