பாஜக கூட்டணியை விட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை என சிரோண்மணி அகாலித்தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
டெல்லித் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட அகாலிதளம் கட்சி விரும்பிய நிலையில் கூட்டணி ஏற்படவில்லை. இதனால் இருகட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
இந்தநிலையில் சிரோண்மணி அகாலித்தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இன்று சந்தித்து பேசினார். பின்னர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில் ‘‘குடியுரிமைச் சட்டத்தை தொடக்கம் முதலே ஆதரித்து வருகிறோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து வரும் சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாஜக இடையே இருந்து சிறுசிறு மனக்கசப்புகள் சரி செய்யப்பட்டு விட்டன. டெல்லி தேர்தலில் நட்புடனேயே தனித்து போட்டியிட விரும்பினோம். மற்றபடி கூட்டணியை விட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை’’ எனக் கூறினார்.