இந்தியா

மகாராஷ்டிராவில் கோர விபத்து: பேருந்து - ஆட்டோ மோதியதில் 26 பேர் பலி

பிடிஐ

மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் மோதின. இதில் இரு வாகனங்களும் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாயினர். 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாசிக் மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த இந்தக் கோரச் சம்பவம் குறித்து நாசிக் ஊரக காவல் கண்காணிப்பாளர் ஆர்த்தி சிங் பிடிஐயிடம் கூறியதாவது:

''மும்பையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் மாலேகான்-தியோலா சாலையில் உள்ள மேஷி பாட்டாவில் நேற்று மாலை 4 மணியளவில் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து (எம்.எஸ்.ஆர்.டி.சி) அருகிலுள்ள துலே மாவட்டத்திலிருந்து நாசிக்கைச் சேர்ந்த கல்வான் நகரத்திற்கு வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்த்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த ஆட்டோ மோதியதில் இரு வாகனங்களும் சாலையோரக் கிணற்றில் உருண்டு விழுந்தன. மோதலின் தாக்கம் மிகவும் கடுமையானது. மோதலில் சிக்கிய பேருந்து, ஆட்டோவையும் இழுத்துக்கொண்டு கிணற்றில் விழுந்தது. இதில் உயிரிழந்தது மற்றும் காயமடைந்தது பெரும்பாலும் பேருந்துப் பயணிகள்தான்.

கிணற்றில் இருந்து 26 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகமான பயணிகள் இன்னும் சேற்றில் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய பம்புகளின் உதவியுடன் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். விபத்து நடந்த இடத்தில் காவல்துறை, தீயணைப்புப் படை மற்றும் உள்ளூர் குழுக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. தற்போது கிணற்றிலிருந்து பேருந்தை வெளியே கொண்டு வந்துள்ளோம்''.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மகாராஷ்டிர அரசின் எம்.எஸ்.ஆர்.டி.சி, போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விபத்துக்கு பஸ் டிரைவர் முதன்மையான காரணம். இறந்தவர்களில் பஸ் டிரைவரும் ஒருவரா என்பது இன்னும் தெரியவில்லை. கால்வான் டிப்போவைச் சேர்ந்த பஸ் டிரைவர் பி எஸ் பச்சவ்தான் விபத்துக்கு முதன்மையானவர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு

போக்குவரத்து அமைச்சரும், எம்.எஸ்.ஆர்.டி.சி தலைவருமான அனில் பராப் இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு என்றும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான முழுச் செலவையும் எம்.எஸ்.ஆர்.டி.சி ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT