இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் பீதியடைய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறினார்.
சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு சென்று வந்த வெளிநாட்டினருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மூலமாக பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, ஹைதரபாத் உள்ளிட்ட நகரங்களில் சீனா சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் அவர்களுக்கு அந்த தாக்கம் இல்லை.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பீதி எழுந்துள்ள நிலையில் இதுபற்றி மத்திய சுகாதரத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடுமுழுவதும் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 17 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதில் 14 பேருக்கு பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ எனக் கூறினார்.